உதவி செய்வதுபோல ஏ.ரி.எம். அட்டையை பெற்று பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.ரி.எம். இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வந்தவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அவர்களின் ஏ.ரி.எம். அட்டையை கொண்டு பணமோசடி செய்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே போலி ஏ.ரி.எம் அட்டையுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் அங்குள்ள வங்கியின் ஏ.ரி.எம். அட்டை மூலம் பணம் பெறச் சென்றுள்ளார்.

அவருக்கு ஏ.ரி.எம். இயங்கி மூலம் பணம் எடுக்க தெரியாத நிலையில் அங்கு நின்ற சந்தேகநபர் அவருக்கு உதவுவது போல உதவ ஏ.ரி.எம் அட்டை மூலம் 4000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவரின் வங்கியில் இருந்த 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் மாயமாகியுள்ளது.

இதனையடுத்து அவர் வங்கிக்கு சென்றபோது வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் ஊடாக காத்தான்குடியில் பணம் எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வங்கியின் சிசிடி கமரா மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.ரி.எம். இயந்திரத்துக்கு அருகில் தான் நின்ற சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பாதிக்கப்பட்ட நபர் வங்கி இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாது இருந்தார்.

அவருக்கு உதவி செய்வது போல சென்று அவரின் ஏ.ரி.எம். அட்டையை வாங்கி இயந்திரத்தில் உட்செலுத்தும் போது அதன் இரகசிய இலக்கத்தை எனது கைகளில் எழுதிவிட்டு அவருக்கு பணத்தை எடுத்து கொடுத்த பின் அவருக்கு தெரியாமல் அவரின் ஏ.ரி.எம். அட்டைக்கு பதிலாக அதே வங்கியின் வேறொரு ஏ.ரி.எம். அட்டையை மாற்றி கொடுத்து விட்டு அவர் சென்றதும் அதிலிருந்த பணத்தை பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் இதேபோல் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களிடம் ஏ.ரி.எம். அட்டைகளை பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது காத்தான்குடி, கர்ப்பலா வீதியைச் சேர்ந்த ரெலோபாயிஸ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன், அவர் தொடர்பான வழக்குகள் கல்முனை, கொழும்பு, மட்டக்களப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையாகியவர் எனவும் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.