களுத்துறையில் ஊர்களுக்குள் வரும் நரிகள் - கடும் அச்சத்தில் வாழும் மக்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

களுத்துறை - மீவனபலான கட்டுஹேன பிரதேசத்தில் வீடொன்றுக்குள் சென்ற நரி ஒன்று இளைஞனைக் கடித்துள்ளது.

நரியின் கடிக்கு உள்ளான கட்டுஹேன பகுதியை சேர்ந்த 16 வயதான இளைஞன் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் இரண்டு நாய்கள் வீட்டு வாசலில் கத்தும் சத்தத்தை கேட்டு அங்கு சென்ற இளைஞன், நரி ஒன்று நாய்களைக் கடிப்பதைக் கண்டுள்ளார். இதனையடுத்து வீட்டுக்குள் சென்ற நரி இளைஞனின் காலைக் கடித்துள்ளது.

இதனையடுத்து ஊர்வாசிகள் நரியை விரட்டிச் சென்று அடித்து கொன்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நரியின் தலை பகுதியை எடுத்துச் சென்றுள்ளனர்.

ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனுக்கு விசர் நாய் கடிக்கு எதிரான ஊசி மருந்து கொடுக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னரும் இந்த ஊருக்குள் சென்ற நரி ஒன்று சிறுவனை கடித்திருந்ததுடன் மக்கள் நரியை அடித்துக் கொன்றனர். கடந்த வாரத்தில் ஹொரணை பிரதேசத்திற்கு அருகில் பல ஊர்களில் நரிகள் மக்களை கடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதுவரையில் 5 நரிகளை மக்கள் அடித்துக்கொன்றுள்ளனர்.

தொடர்ந்தும் நரிகள் ஊர்களுக்கு வருவதால் அங்குள்ள மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதற்கு துரிதமான தீர்வை வழங்குமாறு ஊர் மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.