தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குழு மோதல்: 13 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யூனிட் 07, முள்ளிப்பொத்தானை, திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை - முள்ளிப்பொத்தானை பகுதியிலுள்ள பாத்திமா விளையாட்டு மைதானத்தில் உதைபந்து மற்றும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த இரு முஸ்லிம் இளைஞர்கள் கிண்ணியா வைத்தியசாலையிலும், ஒரு சிங்கள இளைஞர் கந்தளாய் தள வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு சிங்கள இளைஞர்களையும், ஆறு முஸ்லிம் இளைஞர்களையும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காணொளியின் உதவியுடன் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.