மட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று! பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

பேலியகொட மீன் சந்தைக்கு வியாபாரத்திற்காக சென்ற மட்டக்களப்பு - கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.லதாகரன் தெரிவித்துள்ளதுடன், இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்கள் மூலம் திருகோணமலை, பொத்துவில், கல்முனை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பில் தற்போது 11 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே பொது மக்கள் தேவையில்லாமல் வீதிகளில் செல்வதை தவிர்ப்பதுடன், இவர்களுடன் சம்பந்தப்பட்டவாகள் இருப்பின் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவித்து இந்த தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.