ஜனாதிபதி ஆணைக்குழுவில் சஹ்ரானின் மனைவி சாட்சியம் வழங்கும் போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹதியா நேற்று சாட்சியம் வழங்கியுள்ளார்.

இதன்போது கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தற்போது அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் அவரது சாட்சியத்தின் போது ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நேற்று முற்பகல் 9 மணியளவில் ஹதியா ஆணையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது ஆதாரங்களை ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஆணைக்குழு நடவடிக்கைகளை அறிக்கையிட வந்த செய்தியாளர்களுக்கு ஆணைக்குழுவின் வளாகத்திற்கு வெளியே இருக்கை வசதிகள் வழங்கப்படவில்லையெனவும், பல சந்தர்ப்பங்களின் போது ரகசிய ஆதாரங்கள் பதிவு செய்யப்படும் போது செய்தியாளர்கள் ஆணையத்திற்கு வெளியே அமர அனுமதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தின தலைமை நிர்வாக அதிகாரியிடம் வினவிய போது, இந்த பிரச்சினை தமக்கு ஏற்புடையதல்லை என்றும், இந்த விவகாரம் ஆணையத்தின் செயலாளருடன் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார்.

அதன்படி, ஊடகவியலாளர்கள் இந்த விவகாரத்தை ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹெரத்திடம் விசாரித்த போது இது போன்ற பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்களுடன் விவாதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் பதிலளித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.