மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலவரம்

Report Print Ashik in சமூகம்

பெஹலியகொட மீன் சந்தை தொகுதியில் கடந்த 21ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 56 பேருக்கு நேற்றுமுன்தினம் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

பெஹலியகொட மீன் சந்தை தொகுதியில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 56 பேருக்கு கடந்த வியாழக்கிழமை பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பீ.சி.ஆர். பரிசோதனையின் மாதிரிகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற முடிவுகளை தொடர்ந்து மன்னார் மாவட்டத்திலும் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு குறிப்பாக வவுனியா - மன்னார் எல்லை பகுதியான கல்மடு பகுதியில் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேற்று பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் 54 நபர்களுக்கு குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவர்களது மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளையும் எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த 7ஆம் திகதி முதலாவது கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 1ஆம், 2ஆம் நிலை தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகள் அனைத்தும் 'கொரேனா தொற்று இல்லை' என்ற முடிவை தந்தமையினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் அவரோடு தங்கி இருந்து வேலை செய்தவர்களை தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வேலைத்தளத்தில் இருந்தவர்களுக்கான பீ.சி.ஆர். பரிசோதனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெற்று அவர்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றால் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.

பட்டித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அப்பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் ஒருவர் குணமடைந்து இரணவல வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்ப இருக்கின்றார்.

கடந்த முதலாம் திகதி முதல் இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 939 சமூக பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டவை என குறிப்பிட்டுள்ளார்.