புளியங்குளத்தில் மூவரை கைது செய்து 3 மணித்தியாலத்தின் பின் விடுதலை செய்த பொலிஸார்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்தின் பின் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட மூவரும் இரவு 8 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புளியங்குளம், பழையவாடி, சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நேற்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

குறித்த ஆலயத்தின் பக்தர்கள் நாகதம்பிரானிடம் அருள்வாக்குப் பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற புளியங்குளம் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தலைமையிலான பொலிசார் அங்கு வழிபாட்டில் ஈடுபட்ட மூவரை கைது செய்ததுடன், ஆலயத்தில் வெளியில் இருந்த பாதணிகளையும் எடுத்து சென்றுள்ளனர்.

இது குறித்து ஆலய பக்தர்களால் ஊடகவியலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பில் பொலிசாருடன் கலந்துரையாடினர்.

வெளிமாவட்டத்தில் இருந்து சிலர் வருகை தந்தமையால் தாம் கைது செய்ததாக தெரிவித்தனர். ஆனாலும் கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞரணித் தலைவரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினருமான விக்டர்ராஜ் அவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஊடாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு வந்திருந்தார்.

இது குறித்து பொலிசாருடன் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் பொலிசார் அவர்களை எச்சரித்து விடுதலை செய்திருந்தனர்.