மன்னார்- மடு பொலிஸ் பிரிவின், இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார், இரணை இலுப்பைக்குளம் மாங்கண்டியில் வசிக்கும் பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன் வீட்டுக்கு அண்மித்த சிறிய காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டு நின்றுள்ளார். இதன்போது பாட்டியுடன் சென்ற இரு சிறுவர்களும் மரம் ஒன்றின் அருகில் நின்று விளையாடி கொண்டு நின்றுள்ளனர்.
இதன்போது மரத்தின் அடியில் மண்ணில் புதையுண்டு கிடந்த கைக்குண்டு ஒன்றை எடுத்த சிறுவர்கள் அதனை தட்டி விளையாடிய போது அது வெடித்து சிதறியது. அதில் இரு சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு காயமடைந்தவர்களாவர். இது தொடர்பில் இரணை இலுப்பைக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் இந்த கண்ணி வெடி விடுதலைப் புலிகள் அமைப்பினரால புதைக்கப்பட்டிருக்காம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக தகவல்கள் - தீசன்