வவுனியா- பனிக்கன்குளத்தில் புகையிரத கடவை அமைத்து தருமாறு கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் புகையிரத வீதியின் 302 ஆவது கிலோமீற்றர் பகுதியில் புகையிரத கடவை ஒன்றினை அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனிக்கன்குளம் பகுதியில் புகையிரத வீதியில் 302 ஆவது கிலோமீற்றர் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை இல்லாததன் விளைவாக குறித்த புகையிரத பாதைக்கு குறுக்கான வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

குறித்த புகையிரத கடவை அமைத்து தருமாறு பல தடவைகள் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், மாவட்ட அரசாங்க அதிபரினால் கூட இரண்டு தடவைகள் புகையிரத திணைக்களத்துக்கு இந்த விடயம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பனிக்கன்குளம் கிராம அறிவுநதி சனசமூக நிலையத்தினால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய காதர் மஸ்தானிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,குறித்த விடயம் பல ஆண்டுகளாக இடம்பெறாமையால் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும், மிக விரைவில் தீர்வை பெற்று தருமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.