வாழைச்சேனையில் பலர் தனிமைப்படுத்தலில்! பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

Report Print Navoj in சமூகம்
75Shares

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு பேலியகொடை மீன் சந்தைக்கு வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மீன் கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பி.சி.ஆர் பரிசோதனை செய்தவர்களில் பதினொரு பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தியதையடுத்து குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.

குறித்த கொரோனா தொற்று உள்ளவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஐம்பது பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வந்த பின்னரே குறித்த நபர்களுக்கு கொவிட் 19 உள்ளதா, இல்லையா என்று உறுதிப்படுத்த முடியும் என்று சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

இதேவேளை, வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம், ஓட்டமாவடி மீன் சந்தைப் பகுதி, வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதான வீதிகள் என்பவற்றில் பொலிஸாரினால் திரவ தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.ஜெயசுந்திரவின் வழிகாட்டலின் கீழ் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவின் தலைமையில் குறித்த சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் இன்று காலை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும், அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்கள் மாத்திரம் காணப்படுகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காணப்படும் வியாபார நிலையங்கள், தனியார் அலுவலகம் உட்பட்டவை அனைத்தும் மூடப்பட்டு காணப்படுவதுடன், மீன் விற்பனை நிலையங்கள் முற்றாக மூடப்பட்டு காணப்படுகின்றன.

இதேவேளை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்தல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.