மட்டக்களப்பு நகரில் இன்று ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலை..

Report Print Kumar in சமூகம்
1437Shares

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு நகரில் இன்று ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஜனாதிபதி கோட்டாபயவின் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சிபாரிசின் கீழ் நியமனம் பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு தேவநாயகம் மண்டபத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை நியமனம் பெறுவதற்காக வந்த நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளும் அவர்களின் உறவினர்கள் தேவநாயகம் மண்டப நுழைவாயில் திறக்கப்படாத காரணத்தினால் வீதியில் குழுமியிருந்ததாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

தற்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் சூழ்நிலையில் ஒன்றுகூடுதல் தடைசெய்யப்படுவதாக நேற்று சுகாதார பிரிவினரால் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இவ்வாறு பொதுமக்களை ஒன்றுகூட்டியது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று நியமனம் பெற வந்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டதுடன் இறுதியாக இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது குறிப்பிட்ட ஒரு தொகையினரே கட்டம் கட்டமாக அனுமதிக்கப்பட்டதுடன் ஏனையவர்கள் வீதிகளில் கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருக்க வேண்டிய நிலையேற்பட்டது.

சூழ்நிலைகளை கருத்திற் கொள்ளாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்திகளை வெளிப்படுத்தியதை காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன் போது 199 பேருக்கான நியமனங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியவாறாக ஐந்து பேர் வீதம் உள்வாங்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may like this video