கொரோனா அச்சம்! ஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு

Report Print Thirumal Thirumal in சமூகம்
178Shares

ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்குட்பட்ட ஹட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு முன்னெடுக்கபட்ட பீ.சி.ஆர் பரிசோதனை மூலம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பதற்றமடைந்த பொது மக்கள் திடீரென கடைகள் மூடப்படும், ஹட்டன் நகரம் முடக்கப்படும் என்ற அச்சத்தினால் பொருட்களை கொள்வனவு செய்வதில் முந்தியடித்ததை காணக்கூடியதாக இருந்துள்ளது.

அதேநேரம் மக்களின் நலன் கருதி ஹட்டன், டிக்கோயா நகர சபை துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து சிறிது நேரம் கடை வியாபாரங்களை முன்னெடுக்க வாய்ப்பினையளித்துள்ளது.

இதன்போது ஹட்டன் பொலிஸாரினால் பொது மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நகரத்தின் அனைத்து கடைகளையும் மூடுமாறு கடை உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஹட்டன் நகர சபை ஊடாக ஹட்டன் நகரத்தில் குறித்த மீன் கடை பகுதிகளுக்கும், நகரத்தின் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தொற்று நீக்கி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நகரம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.