பீ.சி.ஆர் பரிசோதனைக்கு தடையேற்படுத்திய மீனவருக்கு விளக்கமறியல்

Report Print Steephen Steephen in சமூகம்
213Shares

காலியில் மீனவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தும் போது மருத்துவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு தடைகளை ஏற்படுத்திய மீனவர் ஒருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் ஹர்சன கெக்குனுவல இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவரின் மனநலம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காலி, சீன கொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த விஜேசேகர சுபசிங்க என்ற மீன் வியாபாரியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலியில் மீன்பிடி மற்றும் மீன் விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு PCR பரிசோதனை நடத்துவதற்காக நேற்றைய தினம் பாலதக்ச மாவத்தையில் ரத்கம கடற்கரையில் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

அப்போது அந்த இடத்திற்கு சென்ற இந்த நபர், பரிசோதனைகளுக்கான மாதிரிகளை பெற்றுக்கொண்டிருந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட அதிகாரிகளை திட்டியுள்ளார். பரிசோதனைக்காக மாதிரிகளை வழங்கிக் கொண்டிருந்தவர்களையும் விமர்சித்துள்ளார்.

இதனையடுத்து தமது சுகாதார அணியினரின் பணிகளுக்கு தடையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார வைத்திய அதிகாரி காலி தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதுடன், அங்கு சென்ற பொலிஸார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபரை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.