19ஆவது திருத்தச் சட்டம் எந்த நன்மையையும் பெற்றுக்கொடுக்காத நிலையிலே 20 நிறைவேற்றப்பட்டது! பூ.பிரசாந்தன்

Report Print Kumar in சமூகம்
115Shares

19ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையினையும் பெற்றுக்கொடுக்காத நிலையிலேயே 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான முதல் கட்ட நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்தவாரம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் 20ஆவது திருத்த சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 19ஆவது திருத்தச்சட்டம் சரியானது, அதைக் கொண்டுவர வேண்டும் என பலர் குரல் கொடுத்திருந்தனர்.

ஆனால் அது கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல கேள்விகள் இருக்கின்றன.

19ஆவது திருத்தச்சட்டம் மூலமும் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய நல்லாட்சி காலத்தில் தான் உயிர்த்த ஞாயிறு படுகொலைத் தாக்குதல் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டது, நிர்வாகம் மறுக்கப்பட்டது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் வேலைக்கு கூட பொலன்னறுவையிலிருந்து 381 பணியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

மத்திய வங்கியில் பாரிய ஊழல் நடைபெற்றது. அது மாத்திரமல்ல தமிழர்களின் போராட்டத்தின்பால் கிடைத்த இலங்கையில் எழுத்து மூலமாக இருக்கின்ற ஆகக் குறைந்த அதிகாரமாக இருக்கின்ற மாகாணசபை முறைமையை கூட நடத்த முடியாமல் 2017, 2018ஆம் ஆண்டுகளில் நடத்த வேண்டிய மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாமல் இழுத்தடித்து இன்று மாகாணசபை இல்லாமல் எந்தவிதமான பாடசாலைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும் மாகாணசபையின் அதிகாரத்தின் கீழுள்ள அனைத்துத் திணைக்களங்களுக்கும் நிதி ஒதுக்க முடியாமல் அபிவிருத்தி செய்ய முடியாமல் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் நல்லாட்சியில் 19ஆம் திருத்தச் சட்டமூலம் நடைமுறையிலிருந்த காலத்தில் தீர்க்கமான முடிவெடுக்கப்படாமையாகும்.

19ஆவது திருத்தச்சட்டமானது தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்ற அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாண மக்களுக்காக தொடர்ந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பயணிக்க தயாராக இருக்கின்றது.

எமது தமிழர்களுக்கு எதிராக எந்தவொரு முடிவு எடுக்கப்படுகின்றபோதும் நிச்சயமாக அதற்கெதிராக நிற்கத் தயங்க மாட்டோம்.

தமிழர்களுக்கு சார்பான தமிழர்களின் நிலத்தினையும் நிர்வாகத்தினையும் பாதுகாக்கின்ற, தமிழர்களின் தனித்துவத்தை பாதுகாக்கின்ற அபிவிருத்திகளை கொண்டுவருகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் தொடர்ந்தும் கைகொடுத்து இந்த அரசாங்கத்துடன் இணக்க ஆட்சி நடத்தி எமது மக்களின் வறுமையை போக்கி அவர்களின் தனித்துவத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என்று கூறியுள்ளார்.