விஜய் சேதுபதியின் மகளுக்கு அச்சுறுத்தல்! பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை இளைஞன்

Report Print Jeslin Jeslin in சமூகம்

முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முதரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பிலான தகவல் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் அந்தத் திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியிருந்தார்.

குறிப்பாக ஈழத் தமிழர்கள், ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் குறிப்பாக விஜய் சேதுபதியின் இரசிகர்களிடம் இருந்தே இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன.

முத்தையா முரளிதரன், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இலங்கை தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்திற்கு சார்பானவராக கருதப்படுவதோடு, அவ்வப்பபோது முரளிதரன் வெளியிட்ட அரசியல் கருத்துகளும் இந்த திரைப்படத்தை எதிர்ப்பதற்கான பிரதான காரணமாக அமைந்தது.

இந்த எதிர்ப்புகள் சமூக வலைத்தளங்களிலேயே தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் ட்விட்டரில் தொடர்ச்சியாக விஜய் சேதுபதி மற்றும் முரளிதரனுக்கு எதிரான ஹேஸ் டேக்குகளும் ட்ரென்டிங்கில் இருந்தன.

இவ்வாறு விஜய் சேதுபதிக்கு எதிராக கிளம்பிய ட்விட்டர் வாசிகள் திடீரென விஜய் சேதுபதிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தனர். அதற்கு காரணமும் ஒரு ட்விட்டர் பதிவுதான்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு ட்விட்டர் பதிவாளர் விஜய் சேதுபதி மற்றும் அவரது புதல்வியை தொடர்புபடுத்தி பாலியல் ரீதியாக அச்சுறுத்தி மிக மேசமான வார்த்தைகளை பயன்படுத்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவு விமர்சனங்களையும், அவருக்கு எதிரான கண்டனங்களையும் வலுப்பெற செய்தது.

குறித்த ட்விட்டர் பதிவாளர் தொடர்பில் தமிழக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இலங்கையர் என்ற தகவல் தெரிந்தது. எமது அலுவலக குழு ஒன்று அவர் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்தது.

குறித்த நபர் யார் அவரது முகவரி என்பவற்றை கண்டறிந்த எமது குழு அவரை நேரிலும் சந்தித்தது.

குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற எமது குழு அவருடன் சில மணித்தியாலம் உரையாடியது. அவரது தந்தை வீட்டில் இல்லாத நிலையில் தாய் மட்டுமே இருந்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது வேலையை இழந்துள்ள குறித்த நபர் பல மாதங்களாக வீட்டில் இருந்துள்ளதோடு, சிறிது மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்.

அதற்கான வைத்திய சான்றிதழையும் அவரது தாயார் எமது குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.

சில மணிநேர உரையாடலின் பின்னர் தான் அவ்வாறான ஒரு பதிவை இட்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய குறித்த நபர் அதற்கான விளக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என தனக்கு தெரியும் என தெரிவித்துள்ள அவர், தன்னுடைய ட்விட்டர் பதிவு தொடர்பிலான செய்திகள் வெளியான நிலையில் தான் தற்கொலைக்கு முயன்ற விடயத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.