கொரோனா தொற்றாளிகளுடன் நேரடித் தொடர்பு பேணியவர்கள் இனி வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவர்

Report Print Kamel Kamel in சமூகம்
208Shares

கொவிட்-19 நோய்த் தொற்றாளிகளுடன் நேரடித் தொடர்பு பேணியவர்கள் இனி வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும், ஏதேனும் ஓர் பிரதேசத்தில் தொற்றாளிகள் கண்டறியப்படும் எண்ணிக்கை குறைந்தால் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து கவனம் செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய தனிமைப்படுத்தல் நடைமுறைகள் மீளாய்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் தொற்றாளி ஒருவர் கண்டறியப்பட்டால் அவருடன் நேரடித் தொடர்பு பேணியவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இனி வரும் காலங்களில் தொற்றாளி ஒருவர் கண்டறியப்பட்டால் அவருடன் நேரடித் தொடர்பு பேணியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோர் வீடுகளிலேயே இருக்க வேண்டுமெனவும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.