மட்டக்களப்பில் நாளை முதல் ஒருவாரத்திற்கு அமுலாகும் நடைமுறைகள்! அரசாங்க அதிபர் அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பில் நாளை முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களிலும் மக்கள் ஒன்று கூடும் வகையிலான வழிபாடுகளை இடைநிறுத்தவும், சிகை அலங்கார நிலையங்களை பூட்டவும், வர்த்தக நிலையங்களில் அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் இரண்டாம் கட்ட தொடர்பாளர்கள் 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதற்கமைய உடன் அமுலுக்குவரும் வகையில் தொற்று பரவாமலிருக்க இறுக்கமான தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது தொற்று அபாயம் நிலவும் பிரதேசங்களில் அரச திணைக்களங்களில் 15 தொடக்கம் 20 வரையான உத்தியோகத்தர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பேணி செயற்பட அனுமதிக்கபட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களிலும் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகளை இடைநிறுத்தவும், மிக அவசியமாக நடாத்தப்பட வேண்டுமாயின் மதகுரு உட்பட ஐவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

அதேவேளை சிகை அலங்கார நிலையங்கள் உடன் செயற்படும் வண்ணம் மூடப்பட வேண்டும். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திருமண நிகழ்வுகள் அப்பகுதி சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

மரணங்கள் ஏற்படின் 15 பேர் மாத்திரம் நல்லடக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியும். இதுதவிர நகர்ப்புறங்களான மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் சனநடமாட்டத்தினை கட்டுப்படுத்தவும், வர்த்தக நிலையங்களில் அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும், சந்தைகளை திறந்த மைதானங்களில் நடத்துவதுடன், உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு 50 சதவீதமானோரே அனுமதிக்கப்படுவர்.

பொதுப்போக்குவரத்தில் ஆசனங்களுக்கு அளவான பயணிகள் ஏற்றப்படல் வேண்டும். இவற்றுக்கு மேலதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மக்கள் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் நடமாடும் பிரிவு செயற்படுவதுடன் பொதுமக்கள் இருவருடன் அரச உத்தியோகத்தர்கள் மூவரும் இணைப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தீர்மானத்திற்கு அமைய நாளை முதல் ஒரு வாரகாலத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.