சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை! யாழ். அரச அதிபர்

Report Print Sumi in சமூகம்

கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள், இறுக்கமான சட்ட நடவடிக்கைக்குள் உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தின் பின்னர், நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா செயலணி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வடமாகாணத்தில் உள்ள மாவட்டங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், பொருத்தமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை சட்ட நடவடிக்கைக்குட்டுத்துவது தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுப்பார்கள்.

தற்போது 226 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அதேபோன்று, கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்குள் 14 பேர் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அதேநேரம், கொரோனா தொற்றுக்குள்ளாக்கப்பட்டவர்கள் 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், தொற்றுக்குள்ளானவர்களுடன் பழகியவர்கள் சுய தனிமைப் படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். யாழ்.மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதனால், கொரோனா தொற்றை இல்லாதொழிக்க முடியும்.

அரச அலுவலகங்களில் கடமையாற்றுபவர்களின் விபரங்களை சேகரிக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. அதன் பிரகாரம், உத்தியோகத்தர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் மக்களை அசௌகரியப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படவில்லை. இதன் தாற்பரியத்தை உணர்ந்து மக்கள் தமது தேவைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு தங்கி நின்று வேலை செய்பவர்களின் விபரங்களை சேகரிக்குமாறு, பிரதேச செயலாளர்களைக் கேட்டிருக்கின்றோம். அவ்வாறு சேகரிக்கப்படும் விபரங்கள் தேவைப்படுமிடத்து, சுகாதார பகுதியினரால், உரிய நடவடிக்கைக்குள் உட்படுத்தப்படும்.

அத்துடன், கடல்மார்க்கமாக, சட்டவிரோதமாக கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு உரிய தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, யாழ்.மாவட்டம் சற்று முன்னேற்றமாக உள்ளது. இருந்த போதிலும், இத்தொற்றை வராமல் தடுப்பதற்கு, நாங்கள் எவ்வளவு முயற்சிகள் எடுத்து, அனைவரும் இந்த சுகாதார நடைமுறைகளையும், போக்குவரத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

எனவே, பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, உங்களது பாதுகாப்பையும், குடும்பத்தினரின் பாதுகாப்பையும், சுமூகத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்வதுடன், பாதுகாப்பதும் அவசியம் என்பதை உணர்ந்து செயற்படுமாறு அரசாங்க அதிபர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.