திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு போதைப்பொருளை கடத்தி சென்ற இருவர் கைது

Report Print Yathu in சமூகம்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்கு முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை கடத்தி வந்த இருவரை வாகரையில் வைத்து பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, முச்சக்கரவண்டி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகரை பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.என்.திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் புலனாய்வுத்துறையினர் இன்று காலையிலிருந்து வாகரை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது வாகனத்தில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கரின் உட்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, சீனக்குடா, மட்டிக்கழி பிரதேசத்தைச் சேர்ந்த 26 ,28 வயதுடையவர்கள் எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.