ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் யாழிலும் 105 பேருக்கு நியமனம்

Report Print Sumi in சமூகம்

சுபீட்சத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையின் கீழ் யாழில் முதற்கட்டமாக 105 பேருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நியமனங்களை வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான அங்கஜன் இராமநாதன், மற்றும் அரச அதிபரும் கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது சுமார் 105 பேருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பயிற்சியின் போது 22,500 ரூபா சம்பளம் வழங்கப்படவுள்ளது.

பயிற்சியின் பின்னர் 30 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட்டு, 10 வருடங்களின் பின்னர் நிரந்தரமாக்கப்பட்டு, ஓய்வூதியம் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், நியமனம் பெறும் பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.