மஸ்கெலியா மற்றும் சாமிமலை நகரங்களில் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

மஸ்கெலியா மற்றும் சாமிமலை நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைத்து கொவிட் - 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேசசபைத் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்காமல் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் இரண்டு நகரங்களின் வர்த்தக நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு அமைவாக எதிர்வரும் 31ஆம் திகதி வரை வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாமிமலை மற்றும் மஸ்கெலிய நகரங்களின் வர்த்தகர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார வைத்திய அதிகாரிகளின் இணக்கப்பாட்டுடன் பிரதேசசபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எனினும், ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.

வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் நகரங்களின் பிரதான இடங்கள் தொற்றுநீக்கம் செய்யப்படவுள்ளன.

அதேவேளை, பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும் எனவும், வெளியில் இருந்து வருபவர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்களை வழங்கவேண்டும் எனவும் பிரதேசசபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் கங்கேவத்த பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் நேற்றிரவு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இவர் பேலியகொடை மீன்சந்தை கொரோனா கொத்தணி பரவலுடன் தொடர்புபட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.