மன்னாரில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார்

Report Print Ashik in சமூகம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸாரினால் இன்றைய தினம் காலை 8 மணியளவில் மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ன.

மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன், மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன பிரசாத் ஜெயதிலக்க, மன்னார் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி இ.ஜி.எம்.ஐ.ஏக்கநாயக்க மற்றும் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை மன்னார் நகரசபையினால் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் கிருமி தொற்று நீக்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.