தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சிலர் வெளியிடங்களுக்கு செல்வதால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Report Print Navoj in சமூகம்

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சிலர் வெளியிடங்களுக்கு செல்வதால் சுகாதார பாதுகாப்பு திணைக்களத்திற்கும், பொலிஸாருக்கும் பல அசௌகரியங்கள் ஏற்படுவதால் இவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது என பிரதேச உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டதையடுத்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் பிரதேச உயர் மட்ட அதிகாரிகளுக்கான விஷேட கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் காலங்களில் பிரதேச மக்களை பாதுகாப்பது எப்படி என்றும் ஆராயப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை முஸ்லிம் கிராம சேவகர் பிரிவில் அன்றாட தொழிலாளர்கள் அதிகமாக காணப்படுவதால் அந்த பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க செய்வதுடன், அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் எதிர்வரும் 15 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக வர்த்தக சங்கம் தெரிவித்ததாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் கூட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

இப்பகுதியில் கொரோனாவும், டெங்கும் ஒன்றாக தலை தூக்கி உள்ள நிலையில் இலங்கையின் ஒட்டு மொத்த டெங்கு பாதிப்புக்களில் ஓட்டமாவடியில் மாத்திரம் 50 வீதம் டெங்குவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற சம்பவத்தையும் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இருந்து எந்தவிதமான பொருட்களும் வெளியிலிருந்து வருவதற்கும், பிரதேசத்தில் இருந்து வெளியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவோர் அன்றாட உணவு வகைகளுக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட குழுவின் ஊடாக அல்லது கிராம சேவகர்களுக்கு அறிவித்து பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது தான் கொரோனா தொற்றில் இருந்து பிரதேசத்தினை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இருந்து எவரும் வயல் வேலைகளுக்கு செல்ல முடியாது என்றும், மீன் பிடி தொழில்களுக்கு செல்ல முடியாது என்றும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜெயசுந்தர, பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.