மட்டக்களப்பு - பட்டாபுரம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று! பொலிஸார் விசேட நடவடிக்கை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - பட்டாபுரம் பகுதியில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 26ம் திகதி வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வெல்லாவெளி பொதுச்சுகாதார வைத்திய அலுவலகத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு - பட்டாபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் 26 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு - பம்பலப்பிட்டியில் கடமையாற்றிய நிலையில் கடந்த 22ம் திகதி இலங்கை போக்குவரத்துசபை பேருந்தில் மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளார்.

குறித்த நபருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பெரியபோரதீவு பட்டாபுரத்தில் ஐந்து வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் மற்றும் வெல்லாவெளி பொதுச்சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் உள்ளனர்.

தற்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள வெல்லாவெளி இராணுவ சோதனைச்சாவடி வீதி மூடப்பட்டுள்ளது. அத்துடன், பொறுகாம வீதி பெரிய போரதீவு சந்தி (பட்டிருப்பு) மூடப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து பொதுமக்களின் வீதீப் போக்குவரத்தை முற்றாக தடை செய்துள்ளனர்.

குறிப்பாக பழுகாமம், பெரியபோரதீவு, பட்டாபுரம், முனைத்தீவு, பொறுகாமம், போரதீவு ஆகிய கிராமங்களில் பொதுமக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு குடி நீர் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்கு தொற்று நீக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரும், இராணுவத்தினரும், பொதுச்சுகாதார பரிசோதக உத்தியோகஸ்தர்களும் கொரோனா நோய் அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்பிலிருந்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.