பொலிஸார் மத்தியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்
22Shares

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் பரவி வரும் கொரோனா வைரஸ் அலையைக் கட்டுப்படுத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயவுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொலிஸார் மத்தியிலிருந்தே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

சாதாரணமாக சமூகத்தில் கடமையாற்றும் மற்றும் மக்களுடன் சம்பந்தப்பட்ட பொலிஸார் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வீதிகளில் மற்றும் வீதி காவலரண்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் கொரோனா பரவல் சம்பந்தமாக எவரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.