பெரும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கும் 8 லட்சம் முச்சக்கர வண்டி சாரதிகள்

Report Print Steephen Steephen in சமூகம்
223Shares

நாடு முழுவதிலும் 8 லட்சம் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது தொழிலை செய்ய முடியாத நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளுக்கு அடுத்ததாக பயணிகள் போக்குவரத்து சேவையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள், ரயில் சேவையை விட உயர்ந்த இடத்தில் இருப்பதாகவும் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நிவாரணத்தை வழங்க போக்குவரத்து அமைச்சர் தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

தற்போது ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் முன்பு போல் அன்றாட நடவடிக்கைளில் ஈடுபடாத காரணத்தில் முச்சக்கர வண்டி சாரதி பெரும் பொருளாதார கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

முச்சக்கர வண்டி சாரதிகளின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து பல முறை போக்குவரத்து அமைச்சருக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரை எந்த பதில்களும் கிடைக்கவில்லை.

முச்சக்கர வண்டி சாரதிகளை நம்பி வாழும் குடும்பத்தினரும் தற்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். மிக விரைவில் இவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை என்றால், அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும் எனவும் சுதில் ஜயருக் குறிப்பிட்டுள்ளார்.