20வீத பேருந்து கட்டண அதிகரிப்பு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன் இந்த கட்டண அதிகரிப்புக்காக அரசாங்கம் விதித்த தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை தனியார் பேருந்துகள் நேற்றைய தினமே மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகள் இந்த சட்டத்திட்டங்களை மீறி அதிகளவான பயணிகளை பேருந்துகளில் ஏற்றிச் சென்றுள்ளன.
பேருந்துகளில் இருக்கும் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறையாகும். இதன் காரணமாகவே பேருந்து கட்டணங்கள் 20வீதம் அதிகரிக்கப்பட்டன.
எனினும் குறிப்பாக நேற்று மாலை அளவில் தனியார் பேருந்துகள் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை அறவிட்டு, அதிகளவான பயணிகளை ஏற்றிச் சென்றதுடன் பயணிகள் பேருந்தில் நின்று பயணிப்பதை காண முடிந்துள்ளது.
இது குறித்து பயணிகளுக்கும் பேருந்து நடத்துனர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இது குறித்து பேருந்து போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் இலக்கங்கள் மற்றும் அவை செல்லும் வழித்தடங்கள் குறித்து தனக்கு தெரியப்படுத்துமாறு ராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.