மாமனார் உயிரிழப்பு, மனைவிக்கு கொரோனா - கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட கணவன் பேருந்தில் பயணம்!

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் பேருந்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த தனது மாமனாரின் மரண சான்றிதழ் பெறுவதற்காக பொலநறுவை வெலிகந்த பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன் போது தம்புள்ளை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் இணைந்து அவரை தம்புள்ளை வைத்தியசாலையில் உள்ள கொரோனா பிரிவில் இன்று மாலை அனுமதித்துள்ளனர்.

இந்த நபர் பேருந்தில் பயணிப்பதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவரின் மாமனார் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி தற்போது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்தில் பயணித்தவர்களின் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு குறித்த பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நபருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.