பதுளை - பதுரலிய பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இணையத்தளம் வழியாக கல்வி கற்கும் விதத்தை வெளிக்காட்டும் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் வீடுகளில் இருந்து இணையத்தளம் வழியாக கல்வி கற்கும் இந்த மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்குள் இந்த பிரதேசத்திற்கு இணையத்தள வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் இணையத்தளம் வழியாக தொலைபேசி மூலம் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இணைய வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான அலை வரிசைகள் நாட்டின் பல இடங்களுக்கு தெளிவாக கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், இணைய அலை வரிசைகள் நாடு முழுவதும் தெளிவாக கிடைக்கும் வகையில் விஸ்தரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.