நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு மாவீரர் நினைவுகூறல் தொடர்பில் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு!

Report Print Suman Suman in சமூகம்
180Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு மாவீரர்களை நினைவு கூர்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று நீதிமன்ற கட்டளை கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை வவுனியாவில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் நேற்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்திற்குச் சென்று நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21.112020 தொடக்கம் 27.11.2020 வரையான நாட்களில் எந்த விதமான அஞ்சலி நிகழ்வுகளும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்டளையைக் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் வழங்கி வைத்துள்ளார்.

மேலும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனுக்கும் நீதிமன்ற தடையுத்தரவு கரைச்சி பிரதேச சபையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.