நன்கொடைகளை வழங்க வேண்டாம்: வட மாகாண அழகக சங்கங்கள் கோரிக்கை

Report Print Suman Suman in சமூகம்
127Shares

வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் எனும் பெயரில் நிதி திரட்டப்படுவதாகவும் அதற்கு நன்கொடைகளை வழங்க வேண்டாம் என வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி இயங்கி வருகின்ற அனைத்து அழககங்களின் உரிமையாளர்கள், பணியாளர்களின் மேம்பாட்டிற்காக செயற்பட்டுவரும் வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் எனும் அமைப்பை சீர்குலைக்கும் நோக்குடன் திட்டமிட்ட வகையில் சிலரால் வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் எனும் பெயரில் இலட்சணை ஒன்றையும் அறிமுகம் செய்து எமது அங்கத்தவர்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் நிதி மோசடி செய்ய முனைப்புகாட்டப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக உண்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டு வருவதாக ஐந்து மாவட்டங்களிலிருந்தும் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிதி சேகரிப்பிற்கும் எமது வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனத்தின் ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு அழகக சங்கங்களிற்கும் தொடர்பு இல்லை என்பதனை பகிரங்கப்படுத்துவதுடன், இந்த மோசடி கும்பலின் திட்டமிட்ட செயற்பாட்டை நம்பி எவரும் நன்கொடைகளை வழங்க வேண்டாம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.