வவுனியாவில் உணவகங்களுக்கு சுகாதார பிரிவினரினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு மீளப்பெறப்பட்டது!

Report Print Thileepan Thileepan in சமூகம்
39Shares

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும்.

அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்று நீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளாகும்.

இதற்கு மேலதிகமாக சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பான சாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் என்பவை உடன் அமுலுக்கு வரும் வகையில் கடந்த 05.11.2020 முதல் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டிருந்ததுடன் உணவுகளைப் பொதி செய்து மாத்திரம் வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் பாதிப்படைந்திருந்ததுடன் பல உணவகங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்குக் கொடுப்பனவு வழங்க முடியாமையினால் அவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி சுகாதார நடைமுறைகளுடன் ஒரு மேசைக்கு இருவர் வீதம் அமர்ந்து உணவருந்துவதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார பிரிவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை பரீசிலனை மேற்கொண்ட சுகாதார பிரிவினர் உணவகங்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவினை இன்று (20.11.2020) மாலை 5.00 மணியுடன் மீளப்பெற்றுக்கொள்வதுடன் உணகவங்களுக்கு வருகை தருபவர்களின் பெயர் விபரங்களைப் பதிவு செய்தல் , முகக்கவசம் கட்டாயம் , தேநீருக்கு பிளாஸ்டிக் கப் , ஒரு மேசையில் எதிர் எதிரே இருவர் விகிதம் எனப் பல சுகாதார கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.