கொரோனா கட்டுப்பாட்டு விடயத்தில் சுகாதார அமைச்சு அதிகாரிகளின் ஆதரவு போதுமானதாக இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் எம்.பாலசூரிய இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எனினும் தம்மீது பழி சுமத்தப்படுவதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல்லா விடயங்களுக்கும் பொது சுகாதார அதிகாரிகளை குறைகூறுவது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரத்தின் கொரோனா நிலைமையைப் பொறுத்தவரை, நகரத்தின் பல பகுதிகள் மிகவும் ஆபத்தில் உள்ளன.

குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிறைய விஷயங்கள் செய்யப்படவில்லை.
கொழும்பு நகரத்தில் கொரோனா நிலைமையைச் சமாளிக்கும் போது சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளின் ஆதரவு திருப்திகரமாகவும், போதுமானதாகவும் இல்லை.
முழு பொறுப்புகளும் பொதுச் சுகாதார மற்றும் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் பொது சுகாதார அதிகாரிகளின் அதே கடமைகளுக்காக நியமிக்கப்பட்டனர்.இருப்பினும் அவர்களை களத்தில் காணமுடியவில்லை.
மேலும், கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மன அழுத்தத்தை போக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அத்துடன் மக்களுக்கு போதுமான உணவு பொருட்களை வழங்கவும் அதிகாரிகள் தவறிவிட்டதாகவும் பாலசூரியா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டு விடயத்தில் அரச அதிகாரிகளின் ஆதரவு இருக்கிறது. எனினும்அது முழுமையாக கிடைக்கவில்லை என்றும் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.