முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் துப்பரவு பணி

Report Print Sujitha Sri in சமூகம்

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்றைய தினம் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், கிராம மக்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வருகைதந்த பொலிஸார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனை அழைத்து குறித்த பகுதி இராணுவத்திற்கு உரியதெனவும், துயிலுமில்ல வளாகத்திலிருந்து விலகிச் செல்லுமாறும் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இதற்கு ரவிகரன் பதிலளிக்கையில், குறித்த பகுதியில் நீண்டகாலமாக மாவீரர்களுக்கு வருடந்தோறும் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்ததுடன், இவ்வாண்டும் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்காகவே துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதாகவும், இராணுவத்தினர் துயிலுமில்லத்தை கையகப்படுத்தியுள்ள நிலையில் துயிலுமில்லத்திற்கு வெளியே வீதி ஓரத்தில் அஞ்சலி நிகழ்வை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தொடர்ந்து துப்பரவுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினர் அங்கு துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.