தேசிய பாதுகாப்பை இன்னும் உறுதிப்படுத்த முடியாது: ஆணைக்குழுவில் சாட்சியம்

Report Print Ajith Ajith in சமூகம்
36Shares

திடீர் முடிவொன்றின் அடிப்படையில் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிமை வழி நடத்தியவர்கள் அடையாளம் காணப்படும் வரை தேசிய பாதுகாப்பை இன்னும் உறுதிப்படுத்த முடியாது என்று சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ரவி செனவிரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

சஹ்ரானின் ஆரம்பத்திட்டம் 2020ல் தாக்குதலை நடத்துவதாக இருந்தது. எனினும் திடீரென்று 2019 ஏப்ரலில் தாக்குதலை நடத்த அவர் முடிவு செய்ததாக சாட்சி வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த தாக்குதல்களின் போது சஹ்ரானை வழிநடத்தியவர்களை அடையாளம் காண வேண்டும். அந்த தரப்பினரை விசாரணை செய்யும் வரை தற்போதைய விசாரணை முழுமையடையாது என்றும் சாட்சியம் வழங்கியுள்ளார்.

2019 ஏப்ரலில் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் சஹ்ரானின் சொந்த முடிவு என்றும், அந்த முடிவின் காரணமாக தேசிய தௌஹீத் ஜமாத் (என்.டி.ஜே) உறுப்பினர்கள் சிலர் சஹ்ரானுடன் முரண்பட்டதாக சாட்சி கூறினார். சஹ்ரான் ஹாஷிம் 2014 முதல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையில் 2017 அல்லது 2018 ஆம் ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துவது குறித்து ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தார்.

பின்னர் 2018 இல் மாவனெல்லயில் புத்தர் சிலைகளை தாக்கிய சம்பவம் இடம்பெற்றது. இதன்போது மாவனெல்ல வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான முகமது இப்ராஹிம் அப்துல் சாதிக்கிடம் குறைந்தது ஒரு புத்தர் சிலையையாவது சேதப்படுத்துமாறு சஹ்ரான் அறிவுறுத்தியிருந்தார் என்றும் சாட்சியம் வழங்கியுள்ளார்.

குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணையின் படி தேசிய தௌஹீத் ஜமாத்துக்கு 41 வங்கிக் கணக்குகள் இருந்தன.

அந்தக் கணக்குகளுக்கு பெறப்பட்ட நிதிகள் 2019 ஏப்ரல் 21 அன்று ஷங்ரிலா மற்றும் சினமன்ட் கிராண்ட் விருந்தகங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்திய இப்ராஹிம் சகோதரர்கள் மூலமாக கிடைத்தவை என்பது தெரியவந்ததாக சாட்சி குறிப்பிட்டுள்ளார்.