மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேத்தாதீவு கிராமத்தில் நேற்று காலை 6.30 மணியளவில் கடைக்குச் சென்று திரும்பி வந்த அந்த பகுதியை சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகன் சனுஸிகா எனும் சிறுமி மீது சிறிய ரக லொறி ஒன்று மோதியுள்ளது.
பொலனறுவைப் பகுதியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு சிறுமி மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சிறுமியின் உடல் நிலைமையினை அவதானித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிறுமி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படல் வேண்டும், அதற்காக (உயிர்காப்பு படம்) சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறு இருக்க, (உயிர்காப்பு படம்) சி.டி.ஸ்கேன் எடுக்கும் கதிரியக்கவியலாளர்கள் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு கடமைக்குச் சமூகம் கொடுக்காமல் இருந்து வருகின்றார்கள்.
சிறுமியின் தாய் தனது பிள்ளையைக் காப்பாற்றுங்கள் என கெஞ்சி மன்றாடிய நிலையில், நேற்று காலை சுமார் 7.30 மணிக்கு எடுக்க வேண்டிய (உயிர்காப்பு படம்) சி.டி.ஸ்கேன் முற்பகல் 10.30 மணியளவில்தான் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் (உயிர்காப்பு படம்) சி.டி.ஸ்கேன் அறிக்கையைப் பார்வையிட்ட வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு சிறுமியின் உடல் நிலை இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடலைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி பிரேத பரிசோதனை செய்யுமாறு அறிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாதோடு, அவர் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.