நினைவேந்தல் செய்வதை யாரும் தடுத்து விட முடியாது: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Report Print Theesan in சமூகம்
61Shares

பாதிக்கப்பட்ட தரப்புகள் நினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்து விட முடியாது. அந்த வகையில் அந்த நினைவேந்தலை பாதிக்கப்பட்ட தாய்மார்கள் செய்வார்கள் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கடந்த எட்டு வருடங்களாக நாம் நினைவேந்தல் நிகழ்வைச் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த முறையும் இதனைச் செய்வதற்காக நகர சபையின் மண்டபம் ஒன்றைக் கேட்டிருந்தோம். அதற்கு ஒரு தரப்பு பொலிஸாரால் மாத்திரம் குற்றம் சாட்டப்பட்டு தடை உத்தரவு எங்களுக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் அழைக்கப்பட்டு அவை தொடர்பான கட்டளைகள் வழங்கப்பட்டு, எங்கள் கையொப்பங்களும் பெறப்பட்டது.

அது மட்டுமல்லாமல் நான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கும் என்னை அழைத்து மாவீரர் நாள் நினைவேந்தலை செய்யக்கூடாது என்று கடிதம் எழுதி கையொப்பம் வாங்கியிருந்தார்கள்.

நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தலைச் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தலை விடுதலைப் புலிகள் தான் செய்ய முடியும் அதை வேறு யாரும் செய்ய முடியாது. கடந்த காலங்களிலும் நாங்கள் இதை செய்து வந்துள்ளோம்.

இது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினர்களும் விசாரித்து இருக்கிறார்கள். நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய சின்னங்களையோ, கொடியையோ அல்லது அவர்களுடைய பாடல்களையோ பயன்படுத்தவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் மாவீரர் நாள் என்கின்ற பதத்தை பாவிக்கிறார்களே தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தலை நாங்கள் செய்யவில்லை.

நீராவியடி பிள்ளையார் கோவிலில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பெளத்த துறவியின் உடல் எரிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை செய்தால் நாம் உடனடியாக கைது செய்யப்படுவோம் என்று பொலிஸாரால் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

நாம் கோரியிருந்த நகரசபை மண்டபத்தை கூட வழங்கக் கூடாது என்று நகரசபைக்கும் பொலிஸாரால் தடை உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகவே பாதிக்கப்பட்ட உறவுகள் என்ற வகையில் இந்த நினைவேந்தலை செய்ய முடியாத பரிதாப நிலையை அடைந்திருக்கிறோம். அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தான் இதற்கான தீர்வினை வழங்க வேண்டும். இது நீதிமன்றம் தலையிடும் விடயமல்ல.

சகல தரப்புகளுக்கும் சகல வழிகளிலும் அடக்கு முறைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எங்களுடைய போராட்ட பந்தலைக் கூட இன்றிலிருந்து 29 ஆம் திகதி வரை கண்காணிப்பதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஆனாலும் பாதிக்கப்பட்ட தரப்புகள் நினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது. அந்த வகையில் நினைவேந்தலை பாதிக்கப்பட்ட தாய்மார்கள் செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.