சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்த 47 வயதுடைய நபருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
பளையைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று அவர் திடீரென உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலில் மாதிரி பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் உடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் இதுவரையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.