மாவீரர் நாளுக்கான தடை தமிழ் மக்களை கிளர்ந்து எழச்செய்யும்! ரவிகரன்

Report Print Varunan in சமூகம்

மாவீரர் நாளுக்கான தடை என்பது எமது தமிழ் மக்களிடையே ஒரு வலுவான தமிழ்த் தேசியப்பற்றுதலை உண்டு பண்ணுவதுடன், தமிழர்களை எழுச்சி கொண்டு கிளர்ந்து எழச் செய்யும் செயற்பாடென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ள தடைக்கட்டளையை முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்றைய தினம் ரவிகரனது இல்லத்திற்குச் சென்று கையளித்திருந்தார்.

குறித்த தடைக்கட்டளையினைப் பெற்றுக்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மாவீரர் நாளுக்கான தடை விதிக்கப்படவில்லை. அதற்கு முன்னரும் தடைகள் எவையும் விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் தொடர்ச்சியாக நாங்கள் எங்களுடைய விதைக்கப்பட்ட உறவுகளை எண்ணி கண்ணீர் சிந்தி, அஞ்சலிக்கும் இந்த மாவீரர் நாளை தற்போதைய அரசாங்கம் தடை செய்துள்ளது. அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்வது பொருத்தமானதல்ல.

குறித்த மாவீரர் நாளுக்கான தடை என்பது, எமது தமிழ் மக்களிடையே ஒரு வலுவான தமிழ்த்தேசியப்பற்றுதலை உண்டு பண்ணுவதுடன், தமிழர்களை எழுச்சி கொண்டு கிளர்ந்து எழச்செய்யும் ஒரு செயற்பாடாகப் பார்க்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.