வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறிய 20 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில்

Report Print Rakesh in சமூகம்

சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்ட 20 இற்கும் மேற்பட்டோர் வவுனியாவில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாத் தாக்கம் அற்ற வவுனியாவைக் கட்டியெழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதாரப் பிரிவினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் சீராக அணியாத பணியாளர்கள், வீதியில் முகக்கவசமின்றி பயணித்தவர்கள், தரமற்ற முகக்கவசங்களை அணிந்திருந்தவர்கள் எனப் பலரை சுகாதாரப் பரிசோதகர்கள் இனங்கண்டதுடன்,அவர்களின் பெயர் விபரங்களைத் திரட்டியதுடன், குறித்த நபர்களை சுகாதார திணைக்களத்துக்கு வருமாறு திகதியும் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சுகாதாரப் பரிசோதகர்களால் வழங்கப்பட்ட திகதியில் சில நபர்கள் மாத்திரமே சுகாதாரத் திணைக்களத்துக்கு வருகை தந்திருந்திருந்தனர். வருகை தந்தவர்களுடன் சுகாதாரப் பிரிவினர் கொரோனா தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கி கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்டதுடன், சுகாதாரப் பிரிவினரின் அழைப்பை மீறிய மிகுதி 20 இற்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களைச் சுகாதாரப்பிரிவினர் அவர்களின் வீடுகளிலேயே ஒரு வாரம் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சுகாதாரப் பிரிவினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் வவுனியா மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள் என சமூக ஆர்வளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.