தீவகத்திலும் மக்கள் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த ஊர்காவற்றுறை நீதிமன்றம் தடை!

Report Print Rakesh in சமூகம்
50Shares

யாழ்ப்பாணம் தீவகத்தில் இன்று 21ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய இந்தத் தடை உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டது.

வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன், அவரது சகோதரர் குணாளன் கருணாகரன், முத்தையாபிள்ளை தம்பிராசா, ரமேஷ், கனகையா மற்றும் மதுஷ் ஆகிய 6 பேரைக் குறிப்பிட்டு இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையைத் தடுப்பதற்கும் கொரோனாத் தொற்று நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் தனிமைப்படுத்தல் பிரிவின் கீழும் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் நேற்று நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

வேலணை மற்றும் புங்குடுதீவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் உள்ளன என்று தகவல் கிடைத்துள்ளன என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். அத்துடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.

அதனால் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் கொரோனா நோய்த் தொற்று கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்தத் தடை உத்தரவு வழங்கியுள்ளது.