நவம்பர் 27இல் வீட்டு வாசல்களில் மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றுவோம்! தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அழைப்பு

Report Print Rakesh in சமூகம்

நவமபர் 27ஆம் திகதி தமிழ் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து, வாசல்களில் மாவீரர் நினைவாக தீபங்கள் - சுடர்கள் ஏற்றுமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளால் கூட்டாக அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சீ.வீ.கே. சிவஞானம், ஈஸ்வரபாதம் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் பிரதிநிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு சார்பாக மாணிக்கவாசகர் இளம்பிறையன், கருணாகரன் குணாளன், தனூபன், வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லம் சார்பாக வேந்தன் (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர்) உட்படப் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் .

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி நீதிமன்றங்களின் ஊடாக மாவீரர் நினைவேந்தல் தடையை அரசு ஏற்படுத்தி வரும் நிலையில் எவ்வாறான அணுகுமுறையை கடைப்பிடிப்பது என இதன்போது ஆராயப்பட்டது.

நவம்பர் 27ஆம் திகதி அனைத்து இல்லங்களின் வாசல்களிலும் தீப ஒளியை ஏற்றுமாறு தாயக மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது என்றும், மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக ஊடகங்கள் மூலமாகத் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளலாம் எனவும் இதன்போது கருத்து கூறப்பட்டது.

அதன்பிரகாரம் எதிர்வரும் 24ஆம் திகதியன்று அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றுகூடி, தாயக மக்களைத் தெளிவுபடுத்துவது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழ் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து, வாசல்களில் தீபமேற்றுமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.