ஆட்சியாளர்களின் மனநிலையையே சட்டமும் ஒழுங்கும் பிரதிபலிக்கின்றன: கரைச்சி பிரதேச சபை தவிசாளர்

Report Print Yathu in சமூகம்

மாவீரர் நினைவு நாளினை நடத்தக்கூடாது என அறிவித்திருப்பதன் ஊடாக அதனை பயங்கரவாத தடைச்சட்டத்துடன் இணைந்த வகையில் அரசாங்கம் வேறுபட்ட செய்தியை மக்களிற்கு சொல்வதாகவே தான் உணர்வதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேசசபை தவிசாளரின் அலுவலக அறையில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி தலைமை பொலிஸாரினால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடையுத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவின்படி மாவீரர் நாள் நிகழ்வுகளில் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்குபற்ற கூடாது எனும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விளக்கு ஏற்றல் என்ற விடயமும் சாராம்சத்திலே உட்புகுத்தப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவ்விடயங்கள் தடை செய்யப்பட்ட விடயமாக இருக்கின்றது என குறிப்பிடப்படுகின்றது.

நினைவுகூருதல் என்பது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள செயன்முறையாக அந்த கட்டளையிலே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொவிட் - 19 இனால் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று சொல்லி சௌபாக்கியா அமைச்சரின் அறிக்கை தெரிவிப்பதாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கின்றார்கள்.

அந்த அறிக்கையின் படியும் நிகழ்வுக்கான தடையுத்தரவினை எதிர்வரும் 29.11.2020 வரை அமுலில் இருக்கும் வகையில் தடையுத்தரவு தரப்பட்டுள்ளது.

இந்த மாவீரர் நாள் என்பது யுத்த காலத்தில் உயிரிழந்த தாய்மாரின் புதல்வர்கள், புதல்விகளை நினைவு கூரும் நாள்.

இந்த நினைவு நாளினை நடத்தக்கூடாது என அறிவித்திருப்பதன் ஊடாக அதனை பயங்கரவாத தடைச்சட்டத்துடன் இணைந்த வகையில் அரசாங்கம் வேறுபட்ட செய்தியை மக்களிற்கு சொல்வதாகவே நான் உணர்கின்றேன்.

கடந்த 4 ஆண்டுகள் இதே துயிலுமில்லங்களில் விளக்கேற்றி மக்கள் அழுது தமது உறவுகளை நினைவுகூர்ந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

அப்பொழுதும் இலங்கையின் அரசியலமைப்பு இதுவாகதான் இருந்தது. அப்பொழுதும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தது.

அந்த காலத்தில் இருந்த அரசாங்கம் அதனை சரியான முறையிலே கையாண்டு தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பங்கமும் இல்லாமல் வணக்க நிழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியை வழங்கியிருந்தது. அந்த காலப்பகுதியில் எந்தவொரு பயங்கரவாத மீள் எழுச்சி செயல்களும் இடம்பெறவில்லை.

அக்காலகட்டத்தில் தமது உறவுகளை நினைத்து அழுது ஆற்றுப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளன. அதன்போது இதே பொலிஸார் அனுமதிகளை வழங்கியிருக்கின்றார்கள். இதே மாவட்ட நீதிமன்றங்கள் பல அதற்கான அனுமதிகளை வழங்கியுள்ளது.

இதனை நீதித்துறையின் தவறாக நான் காணவில்லை. ஆட்சியாளர்கள் எதை நினைக்கின்றார்களோ அதை பிரதிபலிக்கின்ற செயன்முறையாகதான் நான் பார்க்கின்றேன். ஆட்சியாளர்கள் இதை தடுக்கின்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றதனாலே அதனுடைய பணிப்புகளால்தான் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

2016ஆம் ஆண்டு 26ஆம் திகதி 12ஆம் மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் அமைந்திருந்த காணிகளை பிரதேச சபைகளிடம் கையளிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்திற்க அமைவாகவும், அதன் பின் நடைபெற்ற காணி பயன்பாட்டுக்குழுவின் அனுமதிக்கு அமையவும் பிரதேச சபைகளினுடைய தாவரவியல் பூங்காவிற்கு என்று கையளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அரசின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் ஊடாகவும், பிராந்திய அபிவிரு்ததி உட்கட்டமைப்பு நிதியின் ஊடாகவும் எல்லைப்புற சுவர் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே அரசாங்கத்தின் நிதிகள்கூட இந்த துயிலும் இல்லங்களில் செய்யப்பட்டுள்ளது. இத்தனையும் செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டும், அந்த பராமரிப்பின் ஊடாக எந்தவொரு பயங்கரவாத மீள் எழுச்சியோ அல்லது தேசிய பாதுகாப்புக்கெதிராக எந்த செயலும் இடம்பெறாத போது சாதாரண மக்களின் வணக்க நிகழ்வை தடுக்க முனைவது பொருத்தமற்ற மனநிலையின் வெளிப்பாடாக இருக்கும்.

இதேவேளை துயிலுமில்ல வளாகங்களை துப்பரவாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரினால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு வருகை தந்திருந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற வகையில் சுகாதார தரப்புக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

தற்போது துயிலுமில்லங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொலிஸார் வீதி தடைகளை அமைத்து வருகின்றனர்.

இதேபோன்று மே மாதம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் உயிரிழந்தவர்களிற்கான நினைவு தூபி ஒன்றை அமைக்க எடுத்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தம் வகையில் வீதி தடைகள் அமைக்கப்பட்டு பசுமை பூங்கா அமைந்திருந்த பகுதியை பாதுகாப்பதாக நீண்ட காலம் செயற்பட்டார்கள்.

அதேபோன்று தற்போது துயிலுமில்லங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் இவ்வாறு வீதி தடைகளை அமைத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.