கொரோனாவினை காரணம் காட்டி தமிழர்களின் நிகழ்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும் அரசாங்கம்! நகுலேஸ்

Report Print Navoj in சமூகம்

தடையுத்தரவு பெற்று விட்டால் எம்மவர்களின் நினைவுகளை எம்மிலிருந்து அகற்றிவிட முடியும் என்று நினைப்பது அரசாங்கத்தின் அறிவின்மையே என ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் ந.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பு தொடர்பில் பொலிஸாரினால் நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளமை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் உணர்வு சார்ந்த விடயத்தைச் சட்டத்தைக் கொண்டு அடக்கிவிடலாம் என்று நினைக்கிறது அரசாங்கம்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பலருக்கு பொலிஸார் மூலம் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

கார்த்திகை 27 மாவீரர் தினம். இது வெறுமனே சாதாரண நினைவு தினமல்ல. எமக்காக உயிர்த்தியாகம் செய்த எமது உறவுகளை, அவர்களின் தியாகத்தை எண்ணி அவர்களுக்காக அஞ்சலிக்கும் நாளாகும்.

கடந்த காலங்களில் இதனை நாங்கள் பலவாறு அனுஷ்டித்து வந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இந்த நிகழ்விற்குத் தடை விதிக்கப்படுகின்றது.

இவ்வருடம் கொரோனாவினை காரணம் காட்டி இந்த அரசாங்கம் தமிழ் மக்களுடைய அனைத்து நிகழ்வுகளுக்கும் முட்டுக் கட்டை போட்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், படுகொலை நினைவேந்தல்கள் மற்றும் தற்போது மாவீரர் தினம் என அரசாங்கத்தினால் விதிக்கப்படும் தடையுத்தரவுகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

இம்முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு வடக்கு கிழக்குப் பகுதிகளில் பலருக்கு பொலிஸார் மூலம் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்தத் தடையுத்தரவுகள் மூலம் அரசு எதைச் சொல்ல வருகின்றது.

தடையுத்தரவு பெற்றுவிட்டால் எம்மவர்களின் நினைவுகளை எம்மிலிருந்து அகற்றிவிட முடியும் என்று நினைப்பது அரசாங்கத்தின் அறிவின்மையே.

எம்மவர்களின் தியாகத்தினை ஒருபோதும் தமிழ் மக்களின் மனங்களிலிருந்து அகற்ற முடியாது. மக்களின் உணர்வு சார்ந்த விடயத்தைச் சட்டத்தைக் கொண்டு அடக்கிவிடலாம் என்று நினைக்கிறது அரசாங்கம்.

நமது அரசியல்வாதிகள் சிலரும் இவ்வாறான விடயங்களை அரசியலாக்க முனைவதே தடைகளுக்கு முக்கிய காரணங்களாகும்.

மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்ப உறவுகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயத்தை தங்கள் அரசியல் கருதிப் பகிரங்கப்படுத்தி தற்போது உறவுகள் கூட அவர்களை நினைவு கூருவதற்குக் கஷ்டப்படும் நிலை தோன்றியுள்ளது.

மாவீரர் பெற்றோர்கள், குடும்ப உறவுகள், முன்னாள் போராளிகளுக்கு எமது வேண்டுகோள். எமது வீரமறவர்களின் நினைவு என்பது எமது உள்ளத்தில் எப்போதும் இருக்கின்ற விடயம்.

இதனைப் பொதுவெளியில், உலகறியத்தான் அனுஷ்டிக்க வேண்டும் என்றில்லை. அவர்களின் தியாகங்களை எண்ணி எமது உள்ளத்திலிருந்து எழும் கண்ணீர் கூட அவர்களுக்கான அஞ்சலிதான். இதனை யாரும், எந்த அரசாங்கமும் தடுக்க முடியாது.

அவர்களின் தியாகத்திற்கு ஈடானது எதுவுமில்லை. அவ்வாறிருக்கையில் பொதுவெளியில் சுடரேற்றுவதன் மூலம் அவர்களின் தியாகத்தை ஈடுசெய்ய முடியாது.

எனவே மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளில் அவர்களுக்கான அஞ்சலிகளை மேற்கொள்வோம். எவ்வித பகிரங்கப்படுத்தலுமின்றி, ஆரவாரமுமின்றி இதனை மேற்கொள்வோம்.

எமது அஞ்சலியை வெளிநாட்டில் உள்ளவர்கள் பார்க்க வேண்டும், மற்றையவர்கள் பார்க்க வேண்டும் என்று இல்லை.

நாம் மேற்கொள்ளும் அஞ்சலியை உரியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு அஞ்சலிகள் சென்றால் போதும்.

தமிழ், சிங்கள அரசியலாளர்களே இதனை அரசியலாக்கி தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் தங்கள் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முனையாதீர்கள்.

மக்களுக்கான அஞ்சலியை மக்களை நினைவேந்த விடுங்கள். இதனைப் பாரதூரமாக்கி சிங்கள மக்கள் மத்தியில் பெரிதாகக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை.

இழந்த உறவுகளை நினைவுகூருவதற்குச் சிங்கள மக்களுக்கு எந்தளவு அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் தமிழ் மக்களுக்கும் உண்டு.

இதனைச் சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் அரசியல் அதற்கு இடமளிப்பதாக இல்லை.

இந்த நிலை மாற வேண்டும். அரசாங்கமே முன்வந்து விதிக்கப்பட்ட தடைகளை நீக்கி எமது மக்களுக்கான அஞ்சலியைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு வழிவகுக்க வேண்டும்.

இன்னும் ஓரிரு தினங்களே இருக்கின்றது. இந்த நினைவேந்தல் செய்வதால் மீண்டும் புலிகள் உருவாகிவிடும் என்று நினைப்பதெல்லாம் அர்த்தமற்ற கற்பனைகள்.

எத்தனையோ கஷ்டங்களை, இழப்புகளை, வடுக்களைக் கொண்டுள்ள எமது மக்கள் மீண்டும் அவற்றிற்குத் தயாராக இல்லை என்பதை இந்த அரசாங்கம் எப்போது விளங்கிக் கொள்ளப் போகின்றதோ என்று புரியவில்லை.

எமது மக்களிடம் எஞ்சியுள்ளது நினைவுகள் மாத்திரமே. அதனையும் தடுக்க எண்ண வேண்டாம். அவ்வாறு தடுக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.