பழைய விலைக்கு விற்பனை செய்யப்படும் சீனி

Report Print Ajith Ajith in சமூகம்

சீனி இறக்குமதியாளர்கள் கடந்த வாரத்தில் அரசாங்கத்தின் நகர்வை எதிர்த்ததுடன் கையிருப்பை தக்கவைத்து பழைய விலையிலேயே சீனியை விற்பனை செய்வதற்கான அனுமதியை கோரியுள்ளனர்.

இதன் காரணமாக சில்லறை விற்பனையாளர்கள் தொடர்ந்தும் தமது கையிருப்புகளை பழைய விலையிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.

எனினும் இதற்கு நுகர்வோர் அதிகாரசபைக்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் போயுள்ளது.

கடந்த 10ஆம் திகதியன்று நுகர்வோர் அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி ஒரு கிலோகிராம் சீனியின் ஆகக்கூடிய விலை 90 ரூபாவாக விற்பனை செய்யப்பட வேண்டும்.

பொதி செய்யப்படாத சீனி 85 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும், அதன் மொத்த விற்பனை விலை 80 ரூபாவாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த வர்த்தமானி வெளியிடப்படுவதற்கு முன்னர் தாம் இறக்குமதி செய்த 90ஆயிரம் மெற்றிக்தொன் சீனியை புதிய விலையில் விற்பனை செய்ய முடியாது என்று இறக்குமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமக்கு கிடைத்த தகவல்களின்படி இறக்குமதியாளர்கள் மேலதிகமாக 80ஆயிரம் மெற்றிக்தொன் சீனியை இறக்குமதி செய்துள்ளனர்.

எனவே அதனை அவர்களால் குறைந்த விலைக்கு விநியோகிக்க முடியும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தாம் இது தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரசபை கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் அரசாங்கத்தினால் வர்த்தகர்களை கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்ய வைக்கமுடியாத தொடர்ச்சியான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னதாக அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை விதித்த போதும் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை. மாறாக அரிசிக்கு சந்தையில் தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.