மட்டக்களப்பு மக்கள் சார்பாக ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த வியாழேந்திரன்

Report Print Rusath in சமூகம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோருக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நன்றியினை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய கிராமிய வீதியை கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டான், கும்பிளாமடு கடற்கரை வீதியினை செப்பனிடும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உத்தியோகபூர்வமாக வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன், அப்பிரதேசத்தில் பயன்தரும் மரக்கன்று ஒன்றினையும் நாட்டிவைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எமது மாவட்டத்திற்கு பல்வேறுபட்ட வீதி அபிவிருத்திப் பணிகளை வழங்கி உதவி புரியும் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிற்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் நாட்களில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் நான் உங்களை விரைவில் சந்திப்பேன் என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் முற்போக்கு தமிழர் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அப்பகுதி பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.