உணவுக்கு தேவையான பயிர்களை வளர்க்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா தொற்று காரணமாக கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மரக்கறி உட்பட உணவுக்கு தேவையான பயிர்களை வளர்க்கும் வேலைத்திட்டம் பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காவத்தை பெருந்தோட்ட நிறுவன ஏற்பாட்டில் நேற்று முன்தினம் காவத்தை அவுப்பை தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் மரக்கறி உட்பட உணவுக்கு தேவையான பயிர்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தனியார் தேயிலை நிறுவனத்தின் முகாமையாளர் ஜனக்க குணவர்தன, பெருந்தோட்டப்பகுதிகளில் தொழில் செய்வோர் மற்றும் தொழில் செய்யாதோர், நிரந்தர வருமானம் இல்லாதோரை இணைத்து அவர்களை விவசாயிகளாக மாற்றும்வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின்கீழ் பெருந்தோட்டப்பகுதிகளில் வீட்டுத் தோட்டங்களை அமைப்பதற்கு தேவையான மரக்கறி விதைகள், மற்றும் மரக்கறி செடிகள், உரம் உட்பட தேவையான அனைத்தும் தோட்ட நிர்வாகத்தின் மூலம் பெற்று கொடுக்கப்படும். அத்துடன் இதற்கென ஒவ்வொரு தோட்டப்பகுதிகளிலும் இரண்டரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட உள்ளது.

குறித்த, தேயிலை நிறுவனத்தின் கீழ் இயங்கும் அவுப்பை, ஓப்பாத்த, வெள்ளந்துர, எந்தான, பொரேனுவ, பெல்மதுளை, ரில்ஹேன, அக்கரெல்ல, உனுவல, ஆகிய தோட்டப்பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.