யாழ்.முனீஸ்வரன் வீதி முன்னறிவித்தலின்றி மாநகரசபையால் மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்.நகரில் வைத்தியசாலை வீதியினையும்,பிரதான வீதியினையும் இணைக்கும் முனீஸ்வரன் வீதி கடந்த 4 நாட்களாக எந்தவித முன்னறிவிப்புமின்றி யாழ். மாநகர சபையினால் வாகனங்கள் உட்பிரவேசிக்காத வகையில் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி மூடப்பட்டதன் காரணமாக முனீஸ்வரன் வீதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களின் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக முனீஸ்வரன் வீதி வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் இன்று அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.மேலும் தெரிவிக்கையில்,

முனீஸ்வரன் வீதியில் 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன. புடவை கடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பாதணி கடைகள் காணப்படுகின்றன.

குறித்த கடைகளில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமையாற்றுகின்றனர். எனினும் யாழ்.மாநகர சபையானது கடந்த 4 நாட்களாக குறித்த வீதியினை யாழ். வைத்தியசாலை வீதியில் ஆரம்பிக்கும் இடத்தில் வீதிமறியல் போட்டு மூடியுள்ளார்கள்.

எனவே எமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலக வங்கியினால் குறித்த வீதியானது அபிவிருத்தி செய்யப்படுகின்ற வேளையிலும் நமக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த வீதியானது ஒரு வழிப்பாதையாக பயணிக்க அனுமதிக்கப்படும். எனினும் தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையானது எந்தவித முன்னறிவிப்புமின்றி குறித்த வீதியை மூடியுள்ளதன் காரணமாக நமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

எனவே இந்த விடயத்தினை மாநகர முதல்வர் கவனத்தில் எடுத்து குறித்த வீதியினை மக்கள் பாவனைக்காக திறந்து விடவேண்டும். அத்தோடு அதனை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.