கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளி

Report Print Yathu in சமூகம்
340Shares

கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் 72 வயதுடைய பாரதி புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம்,திருவையாறு, தர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த நபர் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதலாவது பிரிசோதனை மாதிரி பரிசோதனைக்காக அனுப்பட்ட போது கண்டறிய முடியாத முடிவாக (Inconclusive) கிடைக்க்பெற்றுள்ளது. நேற்றைய தினம் மீளவும் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பட்ட போது தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பாரதிபுரத்தை சேர்ந்த நபர் வெளியிடங்களுக்கு எங்கும் சென்று வராத நிலையில் இவருக்கான தொற்று சமூக தொற்றாக காணப்படுமா என சுகாதார அதிகாரிகள் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்படி நபர் சிகிச்சை பெறச் சென்ற சமயம் பொது வைத்தியசாலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டதன் விளைவாக குறித்த நபர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறச் சென்றது முதல், தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உரிய பாதுகாப்புடன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது வரை, நோயாளியை உரியவாறு கையாண்டமையால் வைத்திய சாலை பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படாது பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வைத்தியசாலை ஊழியர்களோ, நோயாளர்களோ பயனாளிகளோ பதற்றமடைய தேவையில்லை எனவும், அனைத்து நோயாளர் நலன் சேவைகளும் இடையூறின்றி வழமை போல் நடைபெறுமெனவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாரத்தத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் பணிபுரிந்த தொண்டமான் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,நாளை முதல் ஒரு வாரத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகைளையும் மூட வடமாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்,கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது.