தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படுவார்களெனில் அவர்களிற்கான பாதுகாப்பான பகுதி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற இடர் முகாமைத்துவ கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த இடர் முகாமைத்துவம் தொடர்பான முன் ஆயத்த கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது மாவட்டத்தில் பருவ மழை பெய்கின்ற சந்தர்ப்பத்தில் மக்களை இடர்களிலிருந்து பாதுகாப்பது மற்றும், இடர் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மக்களை பாதுகாப்பாக நகர்த்துவது தொடர்பிலும், தற்போது உள்ள கொவிட் தொற்று காலப்பகுதியில் இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்துகொள்வது என்பது தொடர்பிலும் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பின் ஊடாக முக்கிய விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்திற்கு கிடைக்கவுள்ள பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சியின் போது ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பான முன்னாயத்த கூட்டம் ஒன்றை நடாத்தியிருந்தோம். இக்கலந்துரையாடலில் தற்போது இருப்பதான கொவிட் 19 சூழலில் எவ்வாறு இந்த அனர்த்தங்களிற்கு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் குறித்த திணைக்களங்களுடன் நாம் கலந்துரையாடியிருந்தோம்.
இக்கலந்துரையாடலில் சுகாதார திணைக்களம், பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள். அதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறு அனைத்து தரப்பிடமும் கூறியிருக்கின்றோம்.
வழக்கத்துக்கு மாறாக முகாம்களிலே மக்கள் தங்கவைக்கப்படும் நிலை ஏற்படும் போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அனர்த்த சூழ்நிலையை முகம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதையும் அந்த இடத்தில் நாங்கள் உணர்த்தி இருக்கின்றோம்.
வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்ற போது பொதுவாக பாடசாலைகளில், பொது மண்டபங்களில் மக்களை தங்க வைப்பது வழக்கம். அதற்கு அமைவாக தங்க வைக்கின்ற பகுதிகளை இம்முறை அதிகரித்திருக்கின்றோம்.
அது மட்டுமல்லாது இடர் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் உறவினர்களது வீடுகளில் பாதுகாப்பான இடமாக கருதக்கூடிய உறவினர்களது வீடுகளில் தங்கியிருப்பது பொருத்தமானது என்பதை மக்களிடமும், பிரதேச செயலாளர்களிடமும் நாங்கள் கூறியிருக்கின்றோம்.
உறவினர்கள், நண்பர்களது வீடுகளில் பாதுகாப்பான இடமாக கருதுவீர்களானால் அங்கு தங்கியிருப்பதே பாதுகாப்பானது என்பதை மக்களிடம் கூறுகின்றோம். அதேவேளை மக்கள் தங்கக்கூடியதான முகாம்களையும் நாங்கள் அதிகரித்திருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உட்படுவார்களாக இருந்தால் அவர்களை தனிமையாக வேறு இடங்களில் தங்கவைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைவாக தர்மபுரத்திலே ஒரு பொது மண்டபத்தினை இதற்காக நாங்கள் தெரிவு செய்து வைத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.